கரூர் வரலாறு | Karur History


தலைநகரம் :    கரூர்
பரப்பு :    2,958,89 ச.கி.மீ
மக்கள் தொகை :    933,791
எழுத்தறிவு :    574,873 (68.74 %)
ஆண்கள் :    464,489
பெண்கள் :    469,302
மக்கள் நெருக்கம் :    1 ச.கீ.மீ - க்கு 311

 

வரலாறு : 

கரூர் மாவட்டம் பலகாலம் திருச்சி மாவட்டத்துடன் இணைந்திருந்த காரணத்தால்திருச்சி மாவட்டத்தின் வரலாறு கரூர் மாவட்டத்திற்கும் பொருந்தும். (காண்க : திருச்சி மாவட்டம்) நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வருவாய் நிர்வாகம் : 
கோட்டங்கள்-2 (கரூர், குளித்தலை); வட்டங்கள்-4 (கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்).

உள்ளாட்சி நிறுவனங்கள் :
ஊராட்சி ஒன்றியம்-8 (கரூர், தாந்தோனி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடலூர்).

எல்லைகள் : 

வடக்கில் நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களையும், கிழக்கில் பெரம்பலூர்,திருச்சி மாவட்டங்களையும், தெற்கில் திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களையும், மேற்கில் ஈரோடு மாவட்டத்தையும் கரூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 

வழிபாட்டுத் தலங்கள் : 

கடம்பவனநாதர் கோயில் : 

திருச்சிக்கு மேற்கே 31 கி.மீ தொலைவிலும், குளித்தலை இரயில் நிலையத்திற்கு வடமேற்கே 1 1/2 கி.மீ தொலைவிலும் உள்ள திருகடம்பந்துறையில் இக்கோயில் உள்ளது. இறைவன்-கடம்பவனநாதர். இறைவி-முற்றிலா முலையம்மை. தீர்த்தம்-காவிரி. தலவிருட்சம் - கடம்பமரம். இது அப்பர் பதிகம் பாடிய தலமாகும். கண்ணுவ முனிவருக்கும் தேவர்களுக்கும் சிவபெருமான் கடம்ப மரத்தின் அடியில் நின்று காட்சி கொடுத்த ஊர்.

இரத்தினகிரிநாதர் கோவில் : 

இரத்தினகிரி என்றும், திருவாட்போக்கி என்றும் வழங்கப்படும் இவ்வூர் குளித்தலை இரயில் நிலையத்திற்குத் தெற்கே மணப்பாறைக்குச் செல்லும் வழியில் 11 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு அரதனாசலம், சிவாயம் என்ற பெயர்களும் உண்டு. இது அப்பர் பதிகம் பாடிய தலமாகும். கோயில் உயர்ந்த மலை மேல் இருக்கிறது. ஏறுவதற்கு ஏறத்தாழ ஆயிரம் படிகள் உள்ளன. இறைவர் இரத்தினகிரி நாதருக்கு முடித்தழும்பர் என்ற பெயரும் உண்டு. பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை 'இடிபூசை' நடைபெறுகிறது. இவ்வூரில் அகத்திய முனிவர் நண்பகல் வழிபாடு செய்ததினால், இன்றும் நண்பகல் வழிபாடே சிறப்புற நடைபெறுகிறது. இதனால் இறைவனை மத்தியான சுந்தரர் என்ற பெயராலும் அழைப்பர். தலவிருட்சம் வேப்பமரம். இடையன் கொண்டு வந்த பாலைக் காகம் கவிழ்த்தது. அதனால் அது எரியுண்டது. அதனால் இம்மலையைக் காகம் அணுகாத மலை என்பர். திங்கட்கிழமை, கார்த்திகை, தைப்பூசம் நாட்களில் மக்கள் மிகுதியாக இக்கோயிலுக்கு வருகின்றனர்.

மரகதாசலர் கோவில் : 

திருச்சிக்கு மேற்கிலுள்ள குளித்தலை இரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 1 1/2 கி.மீ தொலைவில் இருக்கும் திருக்கம்பந்துறை அடைந்து, காவிரியைக் கடந்து சென்றால் மறுகரையில் திருலிங்கநாத மலையைக் காணலாம். இம்மலையில் கோயில் உள்ளது. கோயிலை அடைய சுமார் 500 படிகட்டுகள் உள்ளன. இது சம்பந்தரால் பாடல் பெற்றது. ஒரே நாளில் காலையில் கடம்பர் கோயிலையும், நண்பகலில் இரத்தினகிரியையும், மாலையில் மரகதாசாலரையும் கண்டு வழிபடல் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக கார்த்திகை மாதத் திங்கட்கிழமைகளில் இவ்விதம் வழிபடுகிறார்கள். ஈ பூசித்தனால் திருலிங்கநாத மலைக்கு ஈங்கோய் மலை என்ற பெயரும் உண்டு. 

திருவெஞ்சமாக்கூடல் : 

இது கரூர் இரயில் நிலையத்திற்குத் தென்கிழக்கில் உள்ளது. இறைவன்-விகிர்த நாதேசுவரர், இறைவி-விகிர்தநாயகி. சுந்தரர் பதிகம் பாடிய தலம். வெஞ்சன் என்னும் வேட மன்னன் வழிபட்ட தலம். திருக்கோயில் சிறிது பள்ளத்தில் காணப்படுகிறது.