கரூரில் உள்ள முக்கிய ஊர்கள்


கரூரில் உள்ள  முக்கிய ஊர்கள் : 

கரூர் : 

Karurஇவ்வூர் நகராட்சியாகவும், ஊராட்சி ஒன்றியத் தலைமையிடமாகவும் மாவட்டத் தலைநகராகவும் விளங்குகிறது. அமராவதி நதிக் கரையில் அமைந்த இவ்வூர் கைத்தறி நெசவுக்குப் புகழ்பெற்று விளங்குகிறது. சாயம் தோய்த்தலும், அச்சடித்தலும் இங்கு அதிகமாக நடை பெறுகின்றன. கால்நடை வளம் மிகுதியாயுள்ளதால் பால், வெண்ணெய், தயிர் முதலியன பல ஊர்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன. கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை அலுவலகம் இங்குள்ளது. சிறந்த வணிகத் தலமாக விளங்குவதால், அரசு அலுவலகங்களும், வங்கிகள் பலவும் நிறைந்துள்ளன. முஸ்லீம்கள் அதிகமாக வாழ்கின்றனர். கம்பு, சோளம் முதலியன மிகுதியாக விளைகின்றன. எள், பருத்தி, புகையிலை ஆகியனவும் பயிராகின்றன. 

அரவக் குறிச்சி : 

இவ்வூர் கரூருக்குத் தென் மேற்கில் 18 மைல் தொலைவில் உள்ளது. இங்கு மைசூர் அரசரால் கட்டப்பட்ட கோட்டை இடிபாடுடன் காணப்படுகிறது. கைத்தறி நெசவு சிறப்புத் தொழிலாக நடைபெறுகிறது. பல பகுதிகளுக்கும் கைத்தறித் துணி ஏற்றுமதியாகிறது. சாயம் தோய்த்தலும் பரவலாக நடைபெற்று வருகிறது. 

சின்னத்தாராபுரம் : 

கரூருக்குத் தென் மேற்கில் உள்ள சிற்றுர். கல் தச்சு வேலைக்குப் பெயர் பெற்றஊராக விளங்குகிறது. 

தண்ணீர்ப்பள்ளி : 

குளித்தலைக்கு அருகில் உள்ள தண்ணீர்ப்பள்ளி கிராமத்தில் சாந்தி வனம் என்னும் இடம் உள்ளது. இது இந்திய கத்தோலிக்க கிறிஸ்துவ சங்கத்தினரால் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவைச் சார்ந்த சுவாமி அருளானந்தா இதனுடைய அமைப்பாளர். இந்த ஆசிரமத்தில் இந்து முறையிலான கிறித்துவ பூசைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

நெரூர் : 

கரூருக்கு ஐந்து மைல் கிழக்கில் உள்ளது. புராதன சிவன் கோயில் ஒன்றும், விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளன. சித்தரான சதாசிவ பிரம்மம் அவர்களின் சமாதி இவ்வூர்ச் சிவாலயத்தில் காணப்படுகிறது. 

பள்ளப்பட்டி : 

அரவக்குறிச்சியில் இணைக்கப்பட்டிருந்த இப்பகுதி தற்போது தனி ஊராக அந்தஸ்து பெற்றுள்ளது. ஒருகாலத்தில் இவ்வூர் தோல் வியாபாரத்தில் சிறந்து விளங்கியது. இங்கு முஸ்லீம்கள் மிகுதியாக வாழ்கின்றனர். 

புகளூர் : 

கரூருக்கு வடமேற்கில் சுமார் பத்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. இரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு பெரிய சர்க்கரை ஆலை நடைபெறுகிறது. இதனால் மக்கள்தொகை மிகுதியாய் உள்ளது. கரும்பு அதிக அளவில் பயிராகிறது. வாழைப்பழத்திற்கும் இவ்வூர் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. பல மாநிலங்களுக்கும் இங்கிருந்து வாழைப்பழம் ஏற்றுமதியாகிறது. தென்னிந்திய சர்க்கரைப் பொருளாதாரத்தில் புகளூர் முக்கிய இடம் பெற்றதால் அகண்ட காவிரியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. புகளூரை ஒட்டியுள்ள தவிட்டுப்பாளையத்தையும் வேலூரையும் நாமக்கல் மாவட்டத்தையும் இப்பாலம் இணைக்கிறது. வியாழக் கிழமைகளில் சந்தை கூடுகிறது. வேளாண்மை வளம் சிறந்து காணப்படுகிறது. தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள காகித ஆலையும் இவ்வூர் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. புகளூரில் சேரர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

குணசீலம் : 

இவ்வூர் கோவிலில் பைத்தியங்கள் குணமாக்கப்படுகின்றனர். 

தான்தோணி : 

கரூருக்கு கிழக்கில் 1 1/2 மைல் தொலைவில் உள்ளது. இங்கு பழைய காலத்துச் சத்திரங்கள் பல தக்க பராமரிப்பின்றி உள்ளன. விஷ்ணு கோயில் ஒன்று மலையில் கட்டப்பட்டுள்ளது. இது கலைச் சிறப்பு மிகுந்துள்ளது. வைஷ்ணவர்கள் இக்கோயிலில் கல்யாணம், பூணுல் அணிவித்தல் முதலியவற்றை நடத்துகின்றனர். கல்தச்சு வேலை சிறப்புத் தொழிலாக உள்ளது. வேளாண்மையும் சிறப்புற நடைபெறுகிறது. 

மல்லப்பட்டி : 

தான்தோணிக்கருகில் இவ்வூர் உள்ளது. இக்கிராமத்தில் கி.பி. 1783 இல் கரூரில் நடந்த போரில் இறந்த தளபதி ஸ்டேன்லி மற்றும் பல போர் வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட சமாதிகள் உள்ளன. 

வெஞ்சமன் கூடலூர் : 

கரூரிலிருந்து தென்கிழக்கில் 12 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. குடகனாறு இவ்வூரை ஒட்டி ஓடுகிறது. மதுரைப் பாண்டியர் கால கல்வெட்டுகள் எட்டு இவ்வூர் சிவாலயத்தில் உள்ளன. கொங்கு நாட்டு ஏழு சிவாலயங்களுள் இதுவும் ஒன்று. 

வெண்ணமலை : 

இவ்வூர் கரூருக்கு வடக்கில் உள்ளது. இங்குள்ள சுப்ரமணியர் கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்குப் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவர்.

வேட்டை மங்கலம் : 

கரூருக்கு வடமேற்கில் 12 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. வேட்டையாட வந்த சேர மன்னர், இப்பகுதியின் இயற்கைப் பேரழகால் கவரப்பட்டு, இவ்வூரை உண்டாக்கிப் பெயரிட்டதாகக் கூறப்படுகிறது. 

குளித்தலை : 

வட்டத்திற்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலைநகராய் விளங்குகிறது. வாணிகத்தில சிறந்திருப்பதாலும், அரசு அலுவலகங்கள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் இருப்பதாலும் இவ்வூரில் மக்கள் தொகை மிகுதி. இங்கு நெசவுத் தொழிலை மேற்கொண்டுள்ள தேவாங்கர் மிகுதியாக வாழுகின்றனர். வேளாண்மையும் வளமாக விளங்குகிறது. ஊரைச் சுற்றிலும் பல்வேறு சிறுதொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. கல்வி வளமும் மேலோங்கியுள்ளது. 

ஆண்டவர் கோயில் : 

குளித்தலைக்குக் கிழக்கில் 20 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள மாமுண்டியா கோவில் புகழ் பெற்று விளங்குகிறது. 

அணியாப்பூர் :

குளித்தலைக்குக் கிழக்கில் 20 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்கு ஏழு கன்னிமார் கோவில் அமைந்துள்ளது. மாசி மாதத்தில் பத்து நாள் திருவிழா நடைபெறும். அப்போது மக்கள் ஏராளமாகக் கூடுவர். 

தேவர் மலை : 

குளித்தலைக்குத் தென்மேற்கில் 22 மைல் தொலைவில் உள்ளது. உக்கிர நரசிம்மர் கோயிலால் ஊர் சிறப்படைந்துள்ளது. 

கடலூர் : 

திருமலைநாயக்கரிடம் பணிபுரிந்த முத்தைய நாயக்கர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட ஊராகும். குளித்தலைக்குத் தென் மேற்கில் சுமார் 28 மைல் தொலைவில் உள்ளது. வரலாற்றுப் புகழ் பெற்று விளங்கும் வேளாண்மையாலும், சிறுதொழில் வளர்ச்சியாலும் சிறப்படைந்து வருகிறது. 

நுங்கவரம் :

குளித்தலையிலிருந்து தென்கிழக்கில் 12 மைல் தொலைவில் இவ்வூர் உள்ளது. சிவாலயத்தாலும், சாத்தண்டி அம்மன் ஆலயத்தாலும் சிறப்புறுகிறது.

பாப்பாக்காள்பட்டி :

குளித்தலைக்குக் கிழக்கில் எட்டு மைல் தொலைவில் உள்ளது. பாப்பாக்காள் என்னும் பெண்மணியால் ஏற்பட்ட ஊர் என்பர். இவ்வூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரபலமானது. 

இரத்தினகிரி : 

குளித்தலைக்குத் தென்மேற்கில் சுமார் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. கூம்பான தோற்றத்தில் காணப்படும் மலைப்பகுதியால் இரத்தினகிரி என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். இம்மலையின் உயரம் 1178 அடி. இதன் உச்சியை அடைய 952 படிகள் வெட்டப்ட்டுள்ளன. இறைவனுக்கு இரத்தினகிரீஸ்வரர் என்ற பெயர் வழங்குகிறது. இக்கோவில் சுற்று மதில்களில் ஹொய்சள மன்னர் வீரசோமேஸ்வரர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

முசிறி : 

வட்டத்திற்கும், ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலைநகராய் விளங்குகிறது. வாணிகமும் வேளாண்மையும் செழித்து வளர்ந்துள்ளன. புதன் கிழமைகளில் சந்தை கூடுகிறது. காவிரியிலிருந்து பிரியும் பெரிய வாய்க்கால் ஊருக்கு அணைப்பாக ஓடுகிறது. அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிலையங்கள் முதலியவற்றால் ஊர் சிறப்புற்று விளங்குகிறது. 

தொட்டியம் : 

தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகர். மக்கள் தொகை மிகுதி. வெற்றிலைக்கு இவ்வூர் புகழ்பெற்றது. வேளாண்மையும் சிறப்புற நடைபெறுகிறது. இது பேரூராட்சியாக விளங்குவதால், பல அரசு அலுவலகங்களும், ஒன்றிய மருத்துவ மனையும் உள்ளன. பேருந்து வசதி பெற்றுள்ளது. முஸ்லீம்கள், யாதவர்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

வேலாயுதம்பாளையம் : 

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிற்றுர். வேளாண்மை சிறப்புற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆர்நாட்டார் மலை, சேர அரசர்கள் மூவரின் வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டுள்ளது. 

தொழில் :

புகளூர் சர்க்கரை ஆலை : 

தென்னிந்திய சர்க்கரைப் பொருளாதாரத்தில் புகளூர் சர்க்கரை ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது. இது காலத்தால் பழமையானது. நாளொன்றுக்கு சுமார் 1500 டன் கரும்புச்சாறு பிழியப்படுகிறது. 

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும், காகித நிறுவனம் : 

இக்காகித ஆலை புகளூரில் ரூ.236 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 50,000 டன் செய்தித்தாள் காகிதமும், 40,000 டன் எழுது அச்சுக் காகிதமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 40 கோடி அன்னிய செலாவணி மிச்சப்படுகிறது. இங்கு கரும்பு சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கிறார்கள். 785 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.