கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை


கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பறக்கும் படை குழுவினர் சோதனை

 

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில் 4 வாகனங்களில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.6,42,380 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

அதன் விபரம் வருமாறு:

மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரும், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

அதனடிப்படையில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில் தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ராஜேந்திரன், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் திரு.மணிசேகரன் ஆகியோர் அடங்கிய பறக்கும்படை குழுவினர் இன்று(20.03.2019) வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6,42,380; பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கேரளா பையனூர் பகுதியில் இருந்து இனுங்கூருக்கு பாலமுருகன் (35) என்பவர் ஓட்டிவந்த டாடா மினி லாரியில் உரிய ஆவணம் இல்லாமல்  கொண்டுவந்த ரூ.1,32,000ம், கேரளா கோழிக்கோடு பகுதியில் இருந்து முக்கொம்பு நோக்கி சென்ற சுரேஷ்குமார்(34) என்பவர் ஓட்டிவந்த மினிலாரி(நுஐஊர்நுசு) வாகனத்திலிருந்து ரூ.1,61,000ம், எர்ணாக்குளத்திலிருந்து பெட்டவாய்த்தலை நோக்கி சென்ற ஷானவாஸ்(37) என்பவர் ஓட்டிவந்த மினிலாரி(நுஐஊர்நுசு) வாகனத்திலிருந்து ரூ.1,90,000ம் என மொத்தம் ரூ.4,83,000ம் மேலக்கோரப்பாளையம் சோதனைச்சாவடியில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல குளித்தலை - மணப்பாறை மைலாடி என்ற கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் திரு.குமார், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் திரு.கருப்பண்ணன் ஆகியோர் அடங்கிய நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினர்; வாகனதணிக்கையில்  ஈடுபட்டிருந்தபோது, ஓசூரில் இருந்து குளித்தலை நோக்கி ஹோண்டாஷைன் இருசக்கர வாகனத்தில் சுப்பையா(45) என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1,59,380 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக மொத்தம இன்றுமட்டும் குளித்தலைக்குட்பட்ட பகுதிகளில் ரூ.6,42,380 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், குளித்தலை வருவாய்க்கோட்டாட்சியருமான திரு.எம்.லியாகத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது குளித்தலை வட்டாட்சியர் திரு.சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.