காலையிலேயே மண்டையை பொளக்குது வெயில்.. அனல் காற்றும் வீசுமாம்.. சூதானமா இருங்க மக்களே


சென்னை: நேற்று போலவே இன்னைக்கும் அனல் காற்று வீச போகிறதாம்... கூடவே வெயிலும் சேர்ந்து கொளுத்த போகிறதாம்!

தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது. மார்ச் மாத துவக்கமே ஏப்ரல், மே மாத வெயிலை போல வாட்ட ஆரம்பித்து விட்டது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி கொண்டிருக்கிறது.

இதில் தமிழகத்தில் சில தினங்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
ஈரப்பதம் 
வறண்ட வானிலை
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசுவது குறைந்துள்ளதால், வறண்ட மேற்குதிசைக் காற்று தமிழகம் நோக்கி வீசுகிறது என்றும் அதனால் பல நகரங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரித்து வருவதாகவும் சொல்லி இருந்தது.
வேலூர் 
100 டிகிரி

நேற்று கூட வேலூரில் 105 டிகிரி, திருத்தணியில் 104.9 டிகிரி, தருமபுரியில் 104.36 டிகிரி, கரூர் பரமத்தியில் 103.64 டிகிரி, மதுரை, திருச்சி, சேலம் 103 டிகிரி ஃபாரன்ஹீட் என வெப்பம் பதிவாகியுள்ளது.
அதிக வெயில் 
8 வருடங்கள்

இதில் முக்கியமானது வேலூர்தான். அதிக குளிரும், அதிக வெயிலும் இந்த மாவட்டத்தில்தான் எப்போதுமே இருக்கும். அதன்படி 8 வருஷத்துக்கு பிறகு நேற்று 105 டிகிரி வெயில் அடித்திருக்கிறதாம்.
அனல் காற்று 
13 மாவட்டங்கள்

இன்றைய நிலவரம் என்னவென்றால், அனல் காற்று கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, ஈரோடு ,திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் வழக்கத்தை விட அதிகபட்சமாக 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்ற எச்சரிக்கையும் சேர்ந்தே விடுக்கப்பட்டுள்ளது.