மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க உலக நாடுகள் வலியுறுத்தல்


நியூயார்க்:

புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.