புதிதாக தொழில் தொடங்க எளிய வழி!

08/21/2016 தொழில்

புதிதாக தொழில் தொடங்க எளிய வழி!

இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு உணவு கடைகளை பார்க்கிறோம். உலக அளவில் முன்னணி பிரைடு சிக்கன் பிராண்ட் நம்ம ஊரு மதுரையிலும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது?
இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்களுக்கான நுகர்வோர்களை நமது நாட்டில் பிடிப்பது எப்படி?
ஒரு மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியை, இன்னொரு கடை திறக்க வேண்டியது தானே என்று கேட்டால், ‘ஐயோ.. ஒரு கடையை நடத்துவதற்கே பெரும் பாடாய் இருக்கிறது, இன்னொரு கடை எதற்கு?’ என்று கேட்பார்.
இந்த சிந்தனை முறை என்பது பழைய சிந்தனை போக்காகும். மாறி வரும் பொருளாதார உலகில் நமது பாரம்பரிய தொழில் அறிவு மட்டும் போதாது. புதிய தொழில் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தொழில் செய்தால்தான் தொழிலில் முன்னேற்றம் காண முடியும்.
அந்நிறுவனங்கள் நவீன முறையில் சிந்தித்து பிரான்சைஸி முறையின் மூலம் தங்களது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துகின்றன.
புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு குறிப்பாக முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு பிரான்சைஸி தொழில்கள் மிகவும் சிறந்தது. என்ன தொழில்... எப்படி தொடங்குவது போன்ற குழப்பம் எதுவும் இதில் இல்லை.
இதை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பதும், இவ்வளவு இலாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதும் இதில் தெளிவாக தெரிந்த விஷயம்.
தொழிலை ஏற்று நடத்தி, கிடைக்கும் இலாபத்தை பகிர்ந்து கொள்வதுதான் இத்தொழில் முறையில் உள்ள அடிப்படை அம்சமாகும். இதற்கு அடிப்படை தேவையானது முதலீடு மட்டுமே. ஏற்கெனவே பிரபலமாக திகழும் நிறுவனங்களின் பிரான்ஸைசாக ஆவது சிறந்தது.
அடிப்படை கல்வி, உயர் கல்வி, கார் சர்வீஸ், உணவகம், காபி கடை, அழகு நிலையம், கம்ப்யூட்டர் சர்வீஸ் என எல்லா தொழில்களிலும் பிரான்சைஸி வாய்ப்பு வந்து விட்டது. உங்களது முதலீட்டுக்கு ஏற்பவும், அனுபவத்திற்கு ஏற்பவும் தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
தேர்ந்தெடுக்கும் தொழிலையும், அதன் வியாபார வாய்ப்புகளையும் பொறுத்து முதலீட்டு தொகை அமையும். சில நிறுவனங்கள் டெபாசிட் தொகையை மட்டும் வாங்குகின்றன. இந்த தொகையை குறிப்பிட்ட வருடங்களில் திருப்பி எடுக்கலாம் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பிரான்சைஸை வாங்கி விட்டால் அந்நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அப்போது தான் அந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சீராக இருக்கும். இதை மீறாமல் இருக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடபட்டு இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு, குறிப்பிட்ட அடையாளம் மக்கள் மனதில் பதிந்திருக்கும். அதுதான் அந்த நிறுவனத்திற்கு கிடைத்த பிராண்ட் வேல்யூ. இந்த சிறப்பு அம்சத்தை குலைக்கும் வகையில் பிரான்சைஸி எடுக்கும் நபர் செயல்படக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை பயிற்சி, ஊழியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற உதவிகளை நிறுவனங்கள் வழங்கும்.
வாடிக்கையாளர்கள் சேவையை நிறுவனமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மூலப்பொருட்கள், விளம்பரம், அலங்காரம், தொழில் தொடர்பான பயிற்சி, தேவையான கருவிகள் உள்பட அனைத்தையும் நிறுவனமே வழங்கி விடும்.
பொதுவாக, புதிதாக ஒருவர் தொழில் தொடங்கினால் அந்த பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க வைக்க நீண்ட காலம் பிடிக்கும். அது வரை தொடர்ந்து செயல்பட வேண்டும்.
அவ்வாறு நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு பரிச்சயமான பிராண்டுகள் சார்ந்த நிறுவனங்களிடம் பிரான்சைஸ் வாய்ப்பு பெற்று தொழில் தொடங்குவது சிறந்தது.
இதன்மூலம் நேரடியாக, தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சம்.
பிரான்சைஸி தொழில்களைப் பொறுத்தவரையில் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட முடியாது என்பது அதில் உள்ள பலவீனமான அம்சம்.
தொழிலை விரிவாக்கம் செய்யவோ, விருப்பம்போல மாற்றங்களை செய்யவோ முடியாது. ஒப்பந்தங்கள், விதிமுறைகள் இவற்றின்படியே செயல்பட முடியும். வருமானத்தின் அடிப்படையில் லாபமும் வரையறுக்கப் பட்டிருக்கும்.
இந்த அடிப்படை உண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டு பிரான்ஸைசி வாய்ப்பு பெற்று தொழில் தொடங்கி வெற்றி பெறுங்கள்.