அபிநந்தனை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க என்ன காரணம்


இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் போர் விமானங்களை துரத்தி அடித்து விரட்டிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீர் பகுதியில் தரை இறங்கி விட்டார். அவரை கைது செய்த பாகிஸ்தான் ராணுவம் இன்று விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தான் முதலில் திட்டமிடவில்லை. இவரை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு தங்களுக்கு சாதகமாக சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ள பாகிஸ்தான் முதலில் முடிவு செய்துள்ளது. இதற்காகத்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதி பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் இந்திய அரசோ அதற்கு பணியவில்லை. அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ திட்டங்களை உளவு பார்ப்பதற்கோ அல்லது வேறு ஏதும் நாசவேலைகளை செய்வதற்காகவோ அந்த நாட்டுக்கு செல்லவில்லை என்பது அனைத்து உலக நாடுகளுக்கும் தெரியவந்தது. தன் நாட்டை தாக்கவந்தவர்களை எதிர்த்தே அவர் சென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

எனவே அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி பாதுகாப்பாக விடுவிக்க வேண்டுமென உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தன. ஐநா சபையில் இருந்தும் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகள் வரத்துவங்கின.

குறிப்பாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அரபு நாட்டு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன், அரபுநாடுகள் உள்பட ஒரே நேரத்தில் 20 நாட்டு தலைவர்கள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கவே வேறு வழியில்லாமல் பாகிஸ்தான், அபிநந்தனை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

மேலும் பாகிஸ்தான் நாட்டு மக்களும் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தில் உடனடியாக அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என போராட்டத்தில் இறங்கிவிட்டனர். குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் பேத்தியும் பத்திரிக்கையாளருமான பாத்திமா பூட்டோ அபிநந்தன்னை விடுவிக்கக் கோரி ஆதரவு திரட்ட துவங்கிவிட்டார்.

இவ்வாறு பல பக்கங்களில் இருந்து எழுந்த நெருக்கடி காரணமாகவே பாகிஸ்தான் அபிநந்தனை உடனடியாக விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.