இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் நின்றுபோன இளைஞரின் திருமணம்


இந்தியா, பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர் பதற்றத்தால் ராஜஸ்தான் இளைஞரின் திருமணம் நின்றுபோனது.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டம், கெஜாத் கா பார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சிங் (23). இவருக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணம், அமர்கோட் மாவட்டம், சினாய் கிராமத்தை சேர்ந்த சாகன் கன்வாருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள மணமகள் இல்லத்தில் வரும் 8-ம் தேதி திருமணத்தை நடத்த இருவீட்டாரும் திட்டமிட்டிருந்தனர். இதற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 90 நாள் பாகிஸ்தான் விசாவை பெற்றனர். பாகிஸ்தானின் தார் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவும் செய்து வைத்திருந்தனர்.
கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல், இதற்குப் பதிலடியாக கடந்த 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தது ஆகியவற்றால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மணமகன் மகேந்திர சிங் கூறியபோது, "போர் பதற்றம் காரணமாக திருமணத்தை தள்ளிவைத்துள்ளோம். இருநாடுகளிடையே அமைதி திரும்பியபிறகு திருமணம் செய்து கொள்வேன்" என்று தெரிவித்தார்.