பெர்லின் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு


பெர்லின் தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்பு

பெர்லினில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரி ஏற்றி 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கைசர் வில்ஹெம் நினைவு சர்ச் அருகே மிகப் பெரிய கிறிஸ்துமஸ் சந்தை அமைந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திங்கட்கிழமையன்று இந்த சந்தை விழாக்கோலம் பூண்டிருந்தது.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தச் சந்தையை உற்சாகமாக கண்டுகளித்து பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதற்காக கூடியிருந்தனர்.

அப்போது ஸ்டீல் கம்பிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று சந்தைக்குள் தாறுமாறாக ஓடியதில் 12 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவந்த நிலையில், தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஐஎஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை ஐஎஸ் இயக்கத்தின் அமாக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,"பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாக்குதலை ஏற்படுத்தி, லாரியிலிருந்து தப்பிச் சென்ற நபர் எங்களது படை வீரர்தான்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த நவெத் (23) என்பவரை ஜெர்மன் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் கடந்த வருடம்தான் பாகிஸ்தானிலிருந்து ஜெர்மனிக்கு வந்திருக்கிறார் என ஜெர்மன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.