இந்திய சினிமாக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம்: பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி


இந்திய சினிமாக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம்: பாகிஸ்தான் நீதிமன்றம் அனுமதி

இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு நடந்த உரி தாக்குதலின் காரணத்தால், இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இயல்புநிலை திரும்பும் வரை பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றுவதற்கு தடை விதிப்பதாக இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் சினிமா துறை, அங்கு இந்திய சினிமாக்கள், குறிப்பாக இந்தி திரைப்படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டது. இதையடுத்து பாகிஸ்தானில், அனைத்து இந்திய தொலைக்காட்சி சானல்களுக்கும் அக்டோபர் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் ரசிகர்களிடையே இந்தி திரைப்படங்களுக்கு மவுசு அதிகம் என்பதால் அங்கு திரையிடப்படும் படங்கள் வசூலில் சாதனை படைத்து வந்தன. ஆனால் அங்கு, இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் சினிமா வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பாகிஸ்தானில் உள்ள திரையரங்குகளில், இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதையடுத்து, திரையரங்குகளில் மட்டும் இந்திய சினிமாக்கள் வெளியிடப்படுவதால், தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமாக்கள் ஒளிபரப்படுவது தொடர்பாக, விதிக்கப்பட்ட தடையையும் விலக்க வேண்டுமென, லியோ கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் பாகிஸ்தானில் உள்ள லாகூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சையத் மன்சூர் அலி ஷா, இந்திய மொழி திரைப்படங்களை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி நேற்று உத்தரவிட்டுள்ளார்.