உயர் விருது... இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ஸ்பெயின் நாட்டின் உயர் விருது


மாட்ரிட்: நிலநடுக்கத்தின் போது ஸ்பெயின் நாட்டு மக்களை காப்பாற்றியதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் அளிக்கப்பட்ட உயர் விருதை மத்திய அமைச்சர் பெற்றுக் கொண்டுள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் அரசு அளித்த உயரிய விருதை சுஷ்மா சுவராஜ் ஏற்றார்.

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பெல்ஜியம், மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.


இறுதிகட்டமாக ஸ்பெயின் நாட்டுக்கு வந்த சுஷ்மா சுவராஜ் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இந்தியா-ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஆபத்தான இடத்தில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 71 பேர் இந்திய அரசின் மீட்புப்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

இதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிய சேவை செய்ததற்காக ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அந்நாட்டின் மிகவும் உயர்ந்த 'கிரான்ட் கிராஸ்' (Grand Cross of Order of Civil Merit) விருதை சுஷ்மா சுவராஜ் ஏற்றுக் கொண்டார்.

ஸ்பெயின் வெளியுறவுத்துறை ஜோசப் போரெல்ஃப் இவ்விருதினை சுஷ்மாவுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.