கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட்ட மாணவர்கள்


கோவையில் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற அபாகஸ் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியில்103வது மண்டல அளவிலான அபாகஸ் என்ற மூளையின் செயல் வேகத்திற்கானபோட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கோவை,நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 4 முதல் 14 வயதுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டிகள் 3 பிரிவுகளின்கீழ் நடத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் பிரிவில் தலா 60 கேள்விகளும், மூன்றாம் பிரிவில் 75 கேள்விகளுக்கும் 3 நிமிடத்தில் விடை எழுத வேண்டும். கால்குலேட்டர் இல்லாமல் அபாகஸ் முறையில் அதிக கணக்குகளுக்கு சரியான விடை எழுத வேண்டும் என்பது விதிமுறை.

மேலும் மாணவ, மாணவிகள் யோகா செய்தபடி,சிலம்பு சுற்றியபடி, கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. போட்டியில் அதிக கேள்விகளுக்கு விடையளித்த 300 மாணவ, மாணவிகளுக்கு சாம்பியன் பட்டமும், 250 மாணவ, மாணவிகளுக்கு தங்க கோப்பையும் வழங்கப்பட்டது.

மேலும் 250 மாணவ, மாணவிகள் வெள்ளி கோப்பையை வென்றனர். இவர்களுக்கு பிரைன் ஓப்ரைன் அகாடமி(brainobrain kids academy) தொழில்நுட்ப இயக்குனர் அருள் சுப்பிரமணியம் மற்றும் நெறியாளர் கோபிநாத் பரிசுகளை வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருள் சுப்பிரமணியம், "அபாகஸ் முறை 40 நாடுகளில் பின்பற்றப்படுவதாகவும், இதனை பயிலும் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகள் பன்முகத்தன்மை வாய்ந்ததாக அமையும்" எனவும் கூறினார். கவனச்சிதறல் ஏற்படாமல் மனம் ஒரு நிலைப்படுவதால், அபாகஸ் பயிலுபவர்கள் கல்வி, விளையாட்டில் சிறந்து திகழ்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்