ஜப்பானை முந்தும் இந்தியா: உலகின் 3வது பொருளாதார வல்லரசாக உயரும்


ஜப்பானை முந்தும் இந்தியா: உலகின் 3வது பொருளாதார வல்லரசாக உயரும்!

லண்டன்: ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2028ம் ஆண்டு இந்தியா உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர்ஸ் என்ற பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.

உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028ல் உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என்றும் வரும் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை முந்தி பொருளாதாரா வல்லரசாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 11 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு 2,481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018ம் ஆண்டு ரஷ்யா 6 வது இடத்திலும், மெக்சிகோ 12 வது இடத்தினையும், கொரியா 13 வது இடத்திலும் துருக்கி 17 இடத்தினையும் வகிக்கும். மேலும் வரும் 2023ஆம் ஆண்டு 4,124 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 4 ஆவது இடத்தை பிடிக்கும் என்றும், ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு 6,560 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் 3வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம் கனடா பத்தாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.