பேச்சுவார்த்தையில் உடன்பாடு- அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்


கடந்த 23ஆம் தேதி முதல் தங்கள் தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. 
அதேசமயம் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் போராட்டத்தை தொடருமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். 

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்ராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உடன் தலைமை செயலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மருத்துவக் கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர். 

இந்நிலையில் 6 வாரத்திற்குள் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று தமிழக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து தங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் வாபஸ் பெற்றனர்.